#IPL2021 கேகேஆர் அணியை சேர்ந்த நியூசிலாந்து வீரருக்கு கொரோனா..! சொந்த நாட்டிற்கு செல்வதில் தாமதம்

By karthikeyan VFirst Published May 8, 2021, 2:29 PM IST
Highlights

நியூசிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான டிம் சேஃபெர்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் நாட்டை சேர்ந்த மற்ற வீரர்களுடன் அனுப்பப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மொத்த 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள், பயிற்சியாளர்கள் என சிலருக்கு கொரோனா உறுதியானதால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களை பாதுகாப்பாக அவரவர் நாடுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்திவருகிறது.

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டதுமே, அவர்கள் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். ஒரு வாரம் குவாரண்டினில் இருந்த ஆஸி., மற்றும் நியூசி., வீரர்களும் மாலத்தீவிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரவர் நாடுகளுக்கு செல்கின்றனர்.

தொடர்ச்சியாக வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுவரும் நிலையில், இந்தியாவிலிருந்து நியூசிலாந்து வீரர்கள் கிளம்புவதற்கு முன்பாக கடைசியாக செய்யப்பட்ட பரிசோதனையில் கேகேஆர் அணியில் ஆடும் நியூசி., விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான டிம் சேஃபெர்ட்டுக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அவரைத்தவிர மற்ற வீரர்கள் மாலத்தீவுக்கு சென்றுவிட்டனர். டிம் சேஃபெர்ட் அகமதாபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவர் பூரண குணமடைந்ததும், அனுப்பப்படுவார். அவர் நியூசிலாந்துக்கு சென்றதும், அங்கு 2 வாரங்கள் குவாரண்டினில் இருந்தபின்னர் தான் வீடு திரும்பமுடியும். அவரது நாட்டை சேர்ந்த வீரர்கள் சென்றுவிட்டநிலையில், டிம் சேஃபெர்ட் செல்வது மட்டும் தாமதமாகியுள்ளது. 
 

click me!