
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், கேகேஆர் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளன.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
கேகேஆர் அணி:
ஆரோன் ஃபின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆரோன் ஃபின்ச்சை 2வது ஓவரிலேயே வெறும் 3 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்பினார் சேத்தன் சகாரியா. அதன்பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திரஜித்தை வீழ்த்திய சுனில் நரைன், அதற்கடுத்த பந்திலேயே சுனில் நரைனை டக் அவுட்டாக்கி அனுப்பினார்.
அதன்பின்னர் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரையும், அதற்கடுத்த பந்திலேயே ஆண்ட்ரே ரசலையும்(0) குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 3 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு 4வது ஓவர் வீசும் வாய்ப்பை டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் வழங்கவில்லை. 13.4 ஓவரில் வெறும் 83 ரன்களுக்கு கேகேஆர் அணி 6 விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், பொறுப்புடன் அடித்து ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ராணா, கேகேஆரின் மானத்தை காப்பாற்றினார். ராணா 34 பந்தில் 57 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 146 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 147 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.