#IPL2021 நீங்க சொல்றத சொல்லுங்க.. நான் பண்ணதுதான் சரி..! தோற்றே போயிருந்தாலும் கெத்தா பேசிய மோர்கன்

By karthikeyan VFirst Published Apr 19, 2021, 6:22 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளேயில் வருண் சக்கரவர்த்திக்கு கூடுதல் ஓவர் கொடுக்காதது குறித்து கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன், அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
 

ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 204 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, கேகேஆரை 166 ரன்களுக்கு சுருட்டி 38 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணியின் முதன்மை வீரரான விராட் கோலி வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸின் அதிரடி அரைசதங்களால் 204 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. ஆர்சிபி அணி 204 ரன்களை குவிக்க அனுமதித்தது கேகேஆர் அணிதான். அதற்கு முக்கிய காரணம் கேகேஆர் கேப்டன் மோர்கன் செய்த கேப்டன்சி தவறுதான்.

ஆர்சிபி இன்னிங்ஸின் 2வது ஓவரை வீசிய ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, அந்த ஓவரில் கோலி(5) மற்றும் ரஜாத் பட்டிதர்(1) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு அதன்பின்னர் பவர்ப்ளேயில் கேப்டன் மோர்கன் பவுலிங்கே கொடுக்கவில்லை. வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் கோட்டாவை டிவில்லியர்ஸுக்காக பாதுகாக்கும் நோக்கில் வருணுக்கு அடுத்த ஓவர் கொடுக்காமல் ஷகிப் அல் ஹசனுக்கு கொடுத்தார் மோர்கன்.

அந்த கேப்பில் மேக்ஸ்வெல் களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், அதன்பின்னர் வருண் சக்கரவர்த்தியை அழைத்துவந்தும் பயனில்லாமல் போய்விட்டது. தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை வீழ்த்திய பவுலருக்கு அடுத்த ஓவரை கொடுத்து மேலும் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை முயற்சி செய்யாமல், வருணை பாதுகாத்து வைத்ததால் தான், மேக்ஸ்வெல் செட்டில் ஆனார்; மேக்ஸ்வெல் செட்டில் ஆனதுதான் கேகேஆருக்கு பெரும் பிரச்னையாக அமைந்தது.

பவர்ப்ளேயில் வருண் சக்கரவர்த்திக்கு கூடுதலாக ஒரு ஓவர் கொடுக்காத மோர்கனின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுமாதிரியான மோசமான கேப்டன்சியை தனது வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை என்று கவுதம் கம்பீர் விமர்சித்திருந்தார். கம்பீர் மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்கள் மோர்கனின் அந்த குறிப்பிட்ட செயலை விமர்சித்திருந்தனர்.
 
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் அதுகுறித்து பேசிய மோர்கன், வருணுக்கு இரண்டாவது ஓவரை கொடுக்காததில் கண்டிப்பாக எந்த தவறும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. மேக்ஸ்வெல் அபாயகரமான வீரர் தான். ஆனால் ஆர்சிபி அணியில் அவர் மட்டுமே நட்சத்திர வீரர் அல்ல. டிவில்லியர்ஸ் மாதிரியான வீரருக்கு ஒருசில ஓவர்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு அணியுமே ஆர்சிபியை போலவே பேட்டிங் டெப்த்தை கொண்ட வலுவான அணிதான். எனவே ஒரு குறிப்பிட்ட வீரருக்காக மட்டுமே பிரத்யேக திட்டமெல்லாம் வகுக்க முடியாது என்று மோர்கன் தெரிவித்தார்.
 

click me!