என் வாழ்க்கையில் நான் பார்த்த கேவலமான கேப்டன்சி இதுதான்..! மோர்கனை கிழித்து தொங்கவிட்ட கம்பீர்

By karthikeyan VFirst Published Apr 19, 2021, 4:52 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கனின் கேப்டன்சியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் கவுதம் கம்பீர்.
 

ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 204 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, கேகேஆரை 166 ரன்களுக்கு சுருட்டி 38 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணியின் முதன்மை வீரரான விராட் கோலி வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸின் அதிரடி அரைசதங்களால் 204 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. ஆர்சிபி அணி 204 ரன்களை குவிக்க அனுமதித்தது கேகேஆர் அணிதான். அதற்கு முக்கிய காரணம் கேகேஆர் கேப்டன் மோர்கன் செய்த கேப்டன்சி தவறுதான்.

ஆர்சிபி இன்னிங்ஸின் 2வது ஓவரை வீசிய ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, அந்த ஓவரில் கோலி(5) மற்றும் ரஜாத் பட்டிதர்(1) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு அதன்பின்னர் பவர்ப்ளேயில் கேப்டன் மோர்கன் பவுலிங்கே கொடுக்கவில்லை. வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் கோட்டாவை டிவில்லியர்ஸுக்காக பாதுகாக்கும் நோக்கில் வருணுக்கு அடுத்த ஓவர் கொடுக்காமல் ஷகிப் அல் ஹசனுக்கு கொடுத்தார் மோர்கன்.

அந்த கேப்பில் மேக்ஸ்வெல் களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், அதன்பின்னர் வருண் சக்கரவர்த்தியை அழைத்துவந்தும் பயனில்லாமல் போய்விட்டது. தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை வீழ்த்திய பவுலருக்கு அடுத்த ஓவரை கொடுத்து மேலும் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை முயற்சி செய்யாமல், வருணை பாதுகாத்து வைத்ததால் தான், மேக்ஸ்வெல் செட்டில் ஆனார்; மேக்ஸ்வெல் செட்டில் ஆனதுதான் கேகேஆருக்கு பெரும் பிரச்னையாக அமைந்தது.

இந்நிலையில், மோர்கனின் அந்த செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே விசித்திரமான கேப்டன்சி இதுதான். விராட் கோலியின் விக்கெட் பெரிய விக்கெட் தான். ஆனால் அதை எடுத்தால் மட்டும் போதுமா? ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய பவுலருக்கு அடுத்த ஓவரை கொடுக்கவில்லை என்பது என்ன மாதிரியான கேப்டன்சி என்று தெரியவில்லை. 

நல்ல ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும்போது விக்கெட் எடுக்கும் பவுலரிடம் கொடுத்து அந்த விக்கெட்டை வீழ்த்தத்தான் பார்க்க வேண்டும். வருணுக்கு ஒருவேளை அடுத்த ஓவரை கொடுத்திருந்தால், அவர் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டையோ அல்லது வேறொரு விக்கெட்டையோ வீழ்த்தியிருக்கக்கூடும். அதன்பின்னர் ஆட்டமே மாறியிருக்கக்கூடும். தொடர் விக்கெட் வீழ்ச்சி, அதன்பின்னர் களத்திற்கு வரும் டிவில்லியர்ஸுக்கு அழுத்தத்தை அதிகரித்திருக்கும். 

நல்ல வேளையாக இந்திய கேப்டன் யாரும் இதுமாதிரியான முட்டாள்தனத்தை செய்யவில்லை. இதுமாதிரியான மோசமான கேப்டன்சியை நான் பார்த்ததில்லை என்று கம்பீர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

click me!