IPL 2021 ஆர்சிபியை தனிநபராக வீழ்த்திய சுனில் நரைன்! எலிமினேட்டரில் வென்று 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய KKR

By karthikeyan VFirst Published Oct 11, 2021, 11:23 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எலிமினேட்டரில் ஆர்சிபியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், இன்று ஆர்சிபிக்கும் கேகேஆருக்கும் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்தது. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

தேவ்தத் படிக்கல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, ஸ்ரீகர் பரத் 9 ரன்னிலும், நன்றாக ஆடிய கேப்டன் கோலி 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய சுனில் நரைன், மற்றொரு சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸையும் 11 ரன்னில் போல்டாக்கினார். இந்த சீசனில் அபாரமாக ஆடிவந்த மேக்ஸ்வெல்லை 15 ரன்னில் நரைன் வீழ்த்தினார்.

கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், கேஎஸ் பரத் ஆகிய ஆர்சிபி அணியின் 4 முக்கியமான வீரர்களையும் வீழ்த்தி ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக கேகேஆர் பக்கம் திருப்பினார் சுனில் நரைன். ஆர்சிபி அணியின் பின்வரிசை வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 20 ஓவரில்ம் 138 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

139 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். ஆனால் 18 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் கில். 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 6 ரன்னிலும், அவரை தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

11 ஓவரில் 80 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்த கேகேஆர் அணிக்கு, ஒரு சிறிய வேகம் தேவைப்பட்டது. அதற்காக 5ம் வரிசையில் இறக்கப்பட்ட சுனில் நரைன், கிறிஸ்டியன் வீசிய 12வது ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தார் நரைன். சுனில் நரைன் 26 ரன்னிலும், நிதிஷ் ராணா 23 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், இலக்கு எளிதானது என்பதால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு ஆர்சிபியை வீழ்த்திவிட்டார் சுனில் நரைன். ஆர்சிபியை கேகெஆர் அணி வீழ்த்தியது என்று சொல்வதைவிட சுனில் நரைன் வீழ்த்தினார் என்று சொல்வதே பொருந்தும்.

இந்த தோல்வியின் மூலம் தொடரை விட்டு வெளியேறியது ஆர்சிபி அணி. இந்த வெற்றியின் மூலம் 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர் அணி, அந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டி  வரும் 13ம் தேதி நடக்கிறது. அதில் ஜெயிக்கும் அணி, ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
 

click me!