மத்திய பிரதேசத்திடம் மண்ணை கவ்வாமல் தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்றிய காந்தி.. அபார சதம்

By karthikeyan VFirst Published Dec 29, 2019, 4:12 PM IST
Highlights

ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து தமிழ்நாடு அணி தோல்வியடையாமல் மானத்தை காப்பாற்றினார் கௌசிக் காந்தி. 
 

விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி ஆகிய இரண்டு தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்ற தமிழ்நாடு அணி, ரஞ்சி தொடரிலும் அசத்தும் முனைப்பில் இறங்கியது. ஆனால் கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேச அணிகளுக்கு எதிராக ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. 

மூன்றாவது போட்டியிலாவது முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இறங்கிய தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான அந்த போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் சொதப்பலாக பேட்டிங் ஆடியது. 

இந்தூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். தமிழ்நாடு அணியின் கேப்டன் பாபா அபரஜித் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 61 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜ் மட்டும் ஓரளவிற்கு நன்றாக ஆடினார். அவர் 43 ரன்கள் அடித்தார். ஹரி நிஷாந்த் 22 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கே முகுந்த், கௌசிக் காந்தி, நாராயண் ஜெகதீசன், ஜெகதீசன் கௌசிக், எம் முகமது என யாருமே சரியாக ஆடவில்லை. படுமோசமான பேட்டிங்கின் விளைவாக முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மத்திய பிரதேச அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் தொடக்க வீரர் ரமீஸ் கான் நிலைத்து ஆடி 87 ரன்களை சேர்த்து அணியை கரைசேர்த்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான வெங்கடேஷ் ஐயரும் மிஹிர் ஹிர்வானியும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். வெங்கடேஷ் 88 ரன்களை குவித்தார். ஹிர்வானி 71 ரன்கள் அடித்தார். ரமீஸ் கான், வெங்கடேஷ், ஹிர்வானி ஆகிய மூவரின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களை குவித்தது. 

184 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணி, ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. தமிழ்நாடு அணியின் ஸ்கோர் 19 ஆக இருந்தபோது, கங்கா ஸ்ரீதர் ராஜு 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்த கௌசிக் காந்தி நிலைத்து ஆடினார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஜெகதீசன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹரி நிஷாந்த் 23 ரன்களிலும் பாபா அபரஜித் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவ்வாறு ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரமிட்டு ஆடிய கௌசிக் காந்தி சதமடித்து அசத்தினார். 

மிகச்சிறப்பாக ஆடிய கௌசிக் காந்தி, அரைசதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்வதை தொடர்ந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 154 ரன்களை குவித்து 6வது விக்கெட்டாக கௌசிக் காந்தி ஆட்டமிழந்தார். மொத்தம் 340 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்களை குவித்தார் கௌசிக் காந்தி. கே முகுந்த் தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, கடைசி நாள் ஆட்டம் முடிந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்களை குவித்திருந்த நிலையில், ஆட்டம் முடிந்ததால் போட்டி டிரா ஆனது. மூன்றாம் நாள் களத்திற்கு வந்த கௌசிக் காந்தி, கிட்டத்தட்ட கடைசி நாள் முழுவதும் பேட்டிங் ஆடி தமிழ்நாடு அணி தோல்வியடையாமல் தவிர்த்ததோடு, நல்ல ஸ்கோரை அடித்து, டிரா செய்ய உதவினார். 
 

click me!