கங்குலியின் பயோபிக்கை இயக்கும் கரன் ஜோஹர்..? தாதாவாக நடிக்கும் நாயகன்?

By karthikeyan VFirst Published Feb 25, 2020, 12:59 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியின் பயோபிக்கை கரன் ஜோஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

இந்தியாவில் சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினால், அதற்கு கிடைக்கும் வரவேற்பு வேற லெவலில் இருக்கிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைகிறது. 

தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான பாக் மில்கா பாக், தோனியின் பயோபிக், சச்சின் டெண்டுல்கரின் பயோபிக் ஆகியவை வெளியாகி பெரும்  வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக, இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவின் பயோபிக் வெளியாகவுள்ளது.

1983ல் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. எனவே “83” என்ற பெயரில் உருவாகியுள்ள கபில் தேவின் பயோபிக்கில் ரன்வீர் சிங், கபில் தேவாக நடித்துள்ளார். 

இவ்வாறாக கிரிக்கெட் வீரர்களின் பயோபிக்கிற்கு தேசியளவில் அனைத்து மொழிகளிலும் பெரிய வியாபாரம் இருப்பதால், பெரிய ஜாம்பவான் வீரர்களின் பயோபிக்கை படமாக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியின் பயோபிக்கை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக கரன் ஜோஹரும் கங்குலியும் சந்தித்து பேசியுள்ளதாகவும், கங்குலியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தகுதியான நடிகரை தேர்வு செய்யும் பணி நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

உங்கள் பயோபிக் எடுக்கப்பட்டால், அதில் யார் உங்கள் வேடத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கங்குலியிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, அவர், தனக்கு ரித்திக் ரோஷனை பிடிக்கும் என்பதால், தனது வேடத்தில் ரித்திக் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். ஆனால் அது கங்குலியின் விருப்பம். திரைப்படம் என்று வரும்போது, அவரது உடலமைப்பு மற்றும் உடல்மொழியை பெற்றிருக்கும் ஒருவரைத்தான் நடிக்கவைப்பார்கள். 

கங்குலியின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில், பயோபிக் எடுக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலே கங்குலியின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை அளிக்கக்கூடியதாகும். 

இந்திய கிரிக்கெட் வீரர்களில், காலத்திற்கு ஏற்றவாறு மாறாத பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் கங்குலி. இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னபின்னமாகியிருந்த சூழலில், சேவாக், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், முகமது கைஃப் என இளம் வீரர்களை அணியில் சேர்த்துக்கொண்டு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்து, கெத்தாக நடைபோட வைத்தவர் கங்குலி.

Also Read - மெல்பர்னை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள்

கேப்டனாகவும் வீரராகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றிய கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்துவருகிறார். 

click me!