கோலி மாதிரியான பெரிய பிளேயர் இவ்வளவு பலவீனமாக பேசக்கூடாது..! கடும் அதிருப்தியடைந்த கபில் தேவ் செம விளாசல்

By karthikeyan VFirst Published Nov 1, 2021, 6:17 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய வீரர்கள் துணிச்சலாக பேட்டிங் ஆடவில்லை; களத்தில் அணியினரின் உடல்மொழியே சரியில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், கோலியின் பலவீனமான கருத்தால் கடும் அதிருப்தியடைந்துள்ளார் கபில் தேவ்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக, இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, 2 படுதோல்விகளுடன் இந்த தொடரை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்தை நேற்று எதிர்கொண்டது இந்திய அணி. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் சூர்யகுமார் ஆடமுடியாததால், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டு, கேஎல் ராகுலுடன் அவர் தொடக்க வீரராக இறக்கபப்ட்டார். ரோஹித் 3ம் வரிசையிலும், கோலி 4ம் வரிசையிலும் இறங்கினர். ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரையும் மாற்றி இறக்கியது இந்திய அணி.

புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆடத்தெரிந்த மிதவேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் படுமட்டமாக பேட்டிங் ஆடினார்கள். 20 ஓவரில் வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்தது இந்திய அணி. இந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு எவ்வளவு மோசமான எதிரணியையும் சுருட்டுவது கடினம். இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றிருந்ததால், கேஎல் ராகுலுடன் அவர் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். இஷான் கிஷன் அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு பவுண்டரி அடித்த இஷான், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் 4 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேஎல் ராகுலும் 18 ரன்னில் நடையை கட்ட, ரோஹித் - கோலி மீது அழுத்தம் அதிகரித்தது. இவர்கள் சீனியர் வீரர்கள் இதுமாதிரி பல அழுத்தமான சூழல்களில் ஆடி அணியை காப்பாற்றியவர்கள் என்றாலும், வெற்றி கட்டாயத்துடன் ஆடிய அழுத்தமும் சேர்ந்துகொண்டது. அத்துடன் நியூசிலாந்து பவுலர்களும் செம டைட்டாக பந்துவீசினர். லெக் ஸ்பின்னை எதிர்கொள்ள கடந்த காலங்களில் ரோஹித்தும் கோலியும் திணறியிருக்கிறார்கள். அவர்களின் மைனஸை வைத்தே அவர்களை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. ஆம்.. ரிஸ்ட் ஸ்பின்னர் இஷ் சோதியை வைத்து ரோஹித்  மற்றும் கோலி ஆகிய இருவரையும் முறையே 14 மற்றும் 9 ரன்களுக்கு வீழ்த்தியது நியூசி., அணி.

அதன்பின்னர் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய அடித்து ஆடக்கூடிய வீரர்களுக்கு, தங்களது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடுவதா அல்லது தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்றிக்கொள்வதா என்பது புரியாமல் இரட்டை மனநிலையுடன் ஆடினர். ஸ்கோர் வேகமெடுக்காததால், எப்போதெல்லாம் பெரிய ஷாட் ஆட முயன்றார்களோ, அப்போதெல்லாம் ரிஷப் பண்ட்(12), ஹர்திக் பாண்டியா(23) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஷர்துல் தாகூரும் டக் அவுட்டானார். ஜடேஜா 26 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட பெரிய ஸ்கோர் அடிக்காததால், 20 ஓவரில் வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்தது இந்திய அணி.

111 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. பவுலிங்கில் பும்ராவை தவிர வேறு யாரும் விக்கெட்டே வீழ்த்தவில்லை. பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியிலும் ஏமாற்றினார். இலக்கு எளிதானது என்பதால், மிகத்தெளிவாக, அவசரப்படாமல் அருமையாக ஆடிஅடித்தது நியூசிலாந்து அணி.

போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நாங்கள் துணிச்சலாக ஆடவில்லை. பேட்டிங்/பவுலிங் இரண்டிலுமே துணிச்சலாக செயல்படவில்லை. சொல்லப்போனால், இவ்வளவு குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு பவுலிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள் துணிச்சலாக பேட்டிங் ஆடவில்லை. எங்களது உடல்மொழியே சரியில்லை. நியூசிலாந்து அணியின் நோக்கம், உடல்மொழி அனைத்தும் சிறப்பாக இருந்தது. நாங்கள் எப்போதெல்லாம் பெரிய ஷாட்டுக்கு முயன்றோமோ அப்போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்ததால், பெரிய ஷாட் ஆடுவதா, வேண்டாமா என்ற தயக்கம் தொற்றிக்கொண்டது என்று கேப்டன் கோலி தெரிவித்தார்.

பெரிய பிளேயரான விராட் கோலியிடமிருந்து இப்படி ஒரு கூற்றை சற்றும் எதிர்பார்த்திராத கபில் தேவ், கோலியின் பேச்சால் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

விராட் கோலி பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், விராட் கோலி மாதிரியான பெரிய வீரர் இப்படியொரு பலவீனமான ஸ்டேட்மெண்ட்டை கூறியிருக்கக்கூடாது. ஒரு கேப்டனின் உடல்மொழியும், மனநிலையும் இந்தளவிற்கு பலவீனமாக இருந்தால், அவரால் அணியை வழிநடத்த முடியாது. இதுமாதிரியான வார்த்தைகளை கேட்பது வருத்தமாக இருக்கிறது.

விராட் கோலி ஒரு ஃபைட்டர். ஒரு கேப்டன், “நாங்கள் துணிச்சலாக ஆடவில்லை” என்றெல்லாம் சொல்லக்கூடாது. நீங்கள் உங்கள் நாட்டுக்காக ஆடுகிறீர்கள். அப்படியிருக்கும்போது இப்படியெல்லாம் பேசக்கூடாது. கடுமையாக போராடி தோற்கலாம். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விஷயம் கூட இந்திய அணிக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய வகையில் இல்லை என்று கபில் தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 

click me!