விராட் கோலியின் பத்து மாத பெண் குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல்.! இன்சமாம் உல் ஹக், முகமது ஆமீர் கடும் கண்டனம்

By karthikeyan VFirst Published Nov 1, 2021, 5:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் அடுத்தடுத்த படுதோல்விகளையடுத்து, கேப்டன் விராட் கோலியின் 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் மனித மிருகங்களுக்கு மிகக்கடும் கண்டனங்களை இன்சமாம் உல் ஹக்கும் முகமது ஆமீரும் தெரிவித்துள்ளனர்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது.

இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. 

பாகிஸ்தானுக்கு எதிரான படுதோல்வி, இந்திய அணியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, அந்த அழுத்தத்திலேயே சரியாக ஆடாமல் படுதோல்வி அடைந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என எதிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. களத்தில் இந்திய அணியின் உடல்மொழியே சரியில்லை என்பதை கேப்டன் விராட் கோலியே போட்டிக்கு பின்னர் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பின், முகமது ஷமி ரசிகர்களால் மதரீதியாக கடுமையாக தாக்கப்பட்டார். ஷமியை மத ரீதியாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்க, முன்னாள் வீரர்கள் பலரும் ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின்னர், மனிதத்தன்மையற்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியை அடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பத்து மாத பெண் குழந்தை வாமிகாவுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க - அஷ்வின் ஆடியிருந்தா மட்டும் பெருசா என்ன செஞ்சுருப்பாருனு எனக்கு தெரியல..! பும்ரா அதிரடி

இந்த மனித்தன்மையற்ற செயலை இன்சமாம் உல் ஹக், முகமது ஆமீர் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் கண்டனம் தெரிவித்துள்ள இன்சமாம் உல் ஹக், விராட் கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். கோலியின் ஆட்டத்தையோ அல்லது கேப்டன்சியையோ விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவரது குடும்பத்தினர்  மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுப்பவர்கள், இது வெறும் விளையாட்டுத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதற்காக இப்படியெல்லாம் செய்வது மனதை காயப்படுத்துகிறது என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.

இதையும் படிங்க - எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்..! நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கூறிய இந்திய அணி கேப்டன் கோலி

இதுதொடர்பாக டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர், இந்தியா இன்னமும் ஒரு சிறந்த அணி தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இதெல்லாம் நல்ல நேரம், மோசமான நேரத்தை பொறுத்தது. ஆனால் அதற்காக வீரர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்கள் அசிங்கமானவை. இது வெறும் விளையாட்டுத்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று முகமது ஆமீர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

I still believe India is a best team its just a matter of having good time or bad time but abusing player's and their family is such a shame don't forget end of the day it's just a game of cricket.

— Mohammad Amir (@iamamirofficial)
click me!