
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கிறது. அதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். அந்தவகையில், அனைத்து அணிகளும் வீரர்களை விடுவித்துவருகின்றன.
இதற்கு முன்பாக டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணிகளுக்கு இடையே பரிமாறப்பட்டனர். ஆர்சிபியிடமிருந்து ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. டெல்லி கேபிடள்ஸிடமிருந்து ஷர்துல் தாகூர், குஜராத் டைட்டன்ஸிடமிருந்து லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரை கேகேஆர் அணி வாங்கியது.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்திற்கு முன் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள் சிலரை பார்ப்போம். மும்பை இந்தியன்ஸின் மேட்ச் வின்னராக கடந்த 13 ஆண்டுகளாக திகழ்ந்த கைரன் பொல்லார்டை விடுவிக்கும் நிலை உருவானது. ஆனால் அவரே ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார். அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
ரூ.14 கோடிக்கு கேன் வில்லியம்சனை தக்கவைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டி20 கிரிக்கெட்டில் வில்லியம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடமுடியாமல் திணறும் நிலையில், அவரை விடுவித்துள்ளது. வில்லியம்சன் ஒரு கேப்டனாக சன்ரைசர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திவந்த நிலையில், அவரை அந்த அணி விடுவித்துள்ளது. ஏலத்தில் இதைவிட குறைவான தொகைக்கு அவரை எடுக்கும் நோக்கில் விடுவித்திருக்கலாம். மேலும் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நிகோலஸ் பூரனையும் சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது.
அதேபோல கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட மயன்க் அகர்வாலை (ரூ.12 கோடி) விடுவித்துள்ளது அந்த அணி.
சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்துவரும் ட்வைன் பிராவோவை விடுவித்துள்ளது சிஎஸ்கே. ரூ.4.4 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்திருந்த சிஎஸ்கே, அடுத்த சீசனுக்கு முன் அவரை கழட்டிவிட்டுள்ளது. ஏலத்தில் இதைவிட குறைவான தொகைக்கு எடுக்க முயற்சிக்கும்.