முகமது ஹஃபீஸை ஒழுங்கா நடத்தல.. அவரு டி20 உலக கோப்பைக்கு முன்பே ஓய்வு அறிவிக்க வாய்ப்பு - காம்ரான் அக்மல்

By karthikeyan VFirst Published Sep 14, 2021, 5:48 PM IST
Highlights

முகமது ஹஃபீஸுக்கு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆட தடையில்லா சான்று வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென அவரை அழைத்ததால் அதிருப்தியில் இருக்கும் ஹஃபீஸ், டி20 உலக கோப்பைக்கு முன்பே ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அரையிறுதி போட்டிகளும், நாளை(15ம் தேதி) இறுதி போட்டியும் நடக்கவுள்ளன. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடச்சென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு செப்டம்பர் 18 வரை அங்கிருந்து ஆடுவதற்கு, தடையில்லா சான்று வழங்கியிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுவதற்காக அணியின் சீனியர் ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸை உடனடியாக நாடு திரும்புமாறு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவுறுத்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

தனக்கு செப்டம்பர் 18 வரை வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை சுட்டிக்காட்டி, கரீபியன் பிரீமியர் லீக்கை முடித்துவிட்டு வர அனுமதி கோரினார் முகமது ஹஃபீஸ். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, உடனடியாக பாகிஸ்தான் வருமாறு அழைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 12ம் தேதி பாகிஸ்தானுக்கு சென்றார் முகமது ஹஃபீஸ்.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை அணுகிய விதத்தால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் முகமது ஹஃபீஸ். அந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, 40 வயதான முகமது ஹஃபீஸ், டி20 உலக கோப்பையில் ஆடாமல் அதற்கு முன்பாகவே ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளது என்று காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள காம்ரான் அக்மல், நான் முகமது ஹஃபீஸுடன் பேசவில்லை. ஆனால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். டி20 உலக கோப்பையில் ஆடாமல், அதற்கு முன்பாகவே அவர் ஓய்வு அறிவிக்கக்கூட வாய்ப்புள்ளது. அவர் டி20 உலக கோப்பையில் ஆடவேண்டுமென்றால், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரை தவறாக நடத்தியிருக்கிறது கிரிக்கெட் வாரியம். அணியின் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரரை இப்படி நடத்தியிருக்கக்கூடாது என்று காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சீனியர் ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸ் இடம்பெற்றுள்ளார். 40 வயதானாலும், டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்துவரும் முகமது ஹஃபீஸ், மிடில் ஆர்டரில் பாகிஸ்தான் அணியின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். அவரும் டி20 உலக கோப்பையில் ஆடவில்லை என்றால், பாகிஸ்தான் அணிக்கு அது பெரும் பாதிப்பாக அமையும்.
 

click me!