கிரிக்கெட்னா என்னனே தெரியாதவங்க தான் கோலியை விமர்சிப்பாங்க..! காம்ரான் அக்மல் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 3, 2021, 6:29 PM IST
Highlights

இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லாததற்கு கேப்டன் கோலியை குறைகூறுபவர்கள் கிரிக்கெட்டே தெரியாதவர்கள் என்று கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் காம்ரான் அக்மல்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அணியாக கோலோச்சிவருகிறது.

விராட் கோலியும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துவருகிறார். உலகம் முழுதும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்தாலும், கோலி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி டிராபி கூட ஜெயிக்காதது அவருக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் தோற்றது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்றது. 

ஐபிஎல்லில் விராட் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதே அவருக்கு ஏற்கனவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. இந்நிலையில், ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று கோப்பையை இழந்துவருகிறது இந்திய அணி.

இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாததற்கு கோலியின் கேப்டன்சி தான் காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ரான் அக்மல், விராட் கோலி தோனிக்கு அடுத்த பெஸ்ட் கேப்டன். 70 சதங்கள் அடித்திருக்கிறார். 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 உலக கோப்பையில் ஆடியிருக்கிறார். ஆம் அவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பை ஜெயிக்கவில்லை தான். ஆனால் அதில் கோலியின் தவறு என்ன இருக்கிறது? அவரது சாதனைகளை பாருங்கள். அவரது கேப்டன்சி டெரிஃபிக்காக இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலி அவரை தயார்படுத்திக்கொண்டுள்ள விதம் அபரிமிதமானது.

கோலியை நீக்கிவிட்டு இந்திய அணிக்கு வேறு கேப்டனை நியமித்தால் மட்டும் இந்திய அணி ஐசிசி தொடர்களை வென்றுவிடும் என்பதற்கு என்ன கியாரண்டி? அது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. அதற்காக கோலியை குறை கூறக்கூடாது. கிரிக்கெட்டே தெரியாதவர்கள் தான் அப்படி கோலியை குறைகூறுவார்கள் என்று காம்ரான் அக்மல் மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.
 

click me!