உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களின் உள்ளம் குளிர ஊதியத்தை உயர்த்தி கொடுத்த பிசிசிஐ..! தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Jul 3, 2021, 5:09 PM IST
Highlights

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ அவர்களே வியக்குமளவிற்கு ஊதியத்தை உயர்த்தி கொடுத்துள்ளது.
 

உலகின் செல்வ செழிப்பான பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தான். இந்தியாவிற்காக ஆடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கிறது. ஐபிஎல்லில் ஆடும் வீரர்களும் கோடிகளில் புரள்கின்றனர்.

ஆனால் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் ஆடும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியே இருக்கின்றனர். அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படாததால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டில் ஊதிய அடிப்படையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

குறிப்பாக கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான உள்நாட்டு போட்டிகள் நடக்காததால் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் பெரும் நிதி நெருக்கடியில் இருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் குரல்களும் எழுப்பினர்.

இந்நிலையில், அவர்களது நலன் கருதி ஊதியத்தை உயர்த்தி கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அருண் தோமல் ஆகியோர் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, ஊதியத்தை உயர்த்தி கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 முதல் தர போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவம் கொண்ட வீரர்களுக்கு முதல் தர(ரஞ்சி) போட்டிகளில் ஒரு நாள் ஊதியமாக ரூ.60,000 வழங்குவது எனவும், அனுபவம் குறைந்த வீரர்களுக்கு ஒருநாளைக்கு ரூ.45,000 ஊதியமாக வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பாக ஒருநாள் ஊதியமாக ரூ.35,000 வழங்கப்பட்டுவந்தது. ஆடும் லெவனில் இடம்பெறாமல் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு ஊதியத்தில் பாதி வழங்கப்படும்.

அதேபோல விஜய் ஹசாரே தொடரில் போட்டிக்கு ரூ.35,000 மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடரில் போட்டிக்கு ரூ.17,500 வழங்கப்படவுள்ளது.  இந்த ஊதிய உயர்வு, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார அளவில் மேம்பட கண்டிப்பாக உதவும்.
 

click me!