இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கஜிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் அப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் தற்போது செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில், பிரசித் கிருஷ்ணா இந்தப் போட்டியில் அறிமுகமானார். மேலும், ரவீந்திர ஜடேஜாவிற்கு முதுகுப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பொறுமையாக ஆரம்பித்த ரோகித் சர்மா ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் தடுமாறி வந்தார். இதையடுத்து கஜிசோ ரபாடா வீசிய 4.6 ஓவரில் 5 ரன்கள் எடுத்த நிலையில், நந்த்ரே பர்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நந்த்ரே பர்கர் பந்தில் கைல் வெர்ரேன்னேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக நிதானமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 17 ரன்களில் நந்த்ரே பர்கர் பந்தில் கைல் வெர்ரேன்னேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
உங்கள் மகனாக இருப்பது மிகவும் அதிஷ்டசாலி – தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த தீபக் சாஹர்!
அப்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் 31 ரன்கள் எடுத்திருந்தார். விராட் கோலி 33 ரன்கள் எடுத்திருந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடங்கினர். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் கிளீன் போல்டார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி கூடுதலாக 5 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரி அடித்த கையோடு ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
South Africa vs India 1st Test: முதல் டெஸ்ட் – அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!
இவரைத் தொடர்ந்து கேஎல் ராகுல் உடன் இணைந்து ஷர்துல் தாக்கூர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஜெரால்டு கோட்ஸீ வீசிய பந்து ஷர்துல் தாக்கூரின் ஹெல்மெட்டில் பட்டு அவரது நெற்றியை பதம் பார்த்தது. எனினும், அதன் பிறகு முதலுதவி எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடி ரன்கள் சேர்த்தார். கடைசியாக அவர் 33 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்து ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூரின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக இந்தப் போட்டியில் ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கஜிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக 14ஆவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிகெட் போட்டிகளில் மொத்தமாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7ஆவது தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஷான் பொல்லாக் (823), டேல் ஸ்டெயின் (697), மகாயா நிடினி (661), அலான் டொனால்டு (602), ஜாக் காலிஸ் (572), மோர்னே மோர்கல் (534) ஆகியோர் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர். இவர்களது வரிசையில் தற்போது ரபாடா இணைந்துள்ளார். இளம் வயதில் (28) சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனைக்கு ரபாடா சொந்தக்காரராகியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D