#ENGvsIND சதத்தை நோக்கி ஜோ ரூட்.. பேர்ஸ்டோ அரைசதம்..! பெரும் சிக்கலில் இந்தியா

By karthikeyan VFirst Published Aug 14, 2021, 6:00 PM IST
Highlights

2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் பெரிய ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து அணி செல்கிறது. ரூட் - பேர்ஸ்டோ ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறிவருகிறது.
 

இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அமைத்து கொடுத்த அடித்தளம் மற்றும் அதன்பின்னர் கேஎல் ராகுல் ஆடிய பெரிய இன்னிங்ஸ் ஆகியவற்றின் விளைவாக 364 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த ராகுல் 129 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 83 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கோலி 42 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் சிப்ளி(11) மற்றும் ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரையும் 15வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் சிராஜ். 23 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸும் ஜோ ரூட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

 3வது விக்கெட்டுக்கு ரூட்டும் பர்ன்ஸும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு ஒருசில ஓவர்களுக்கு முன் ரோரி பர்ன்ஸை 49 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. ரூட்டும் பேர்ஸ்டோவும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனை ரூட்டும் பேர்ஸ்டோவும் தொடர்ந்தனர். அரைசதம் அடித்த ரூட், தனது ஃபார்மை தொடர, கண்டிப்பாக ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட வேஎண்டிய கட்டாயத்தில் இருந்த பேர்ஸ்டோ, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ரூட்டும் பேர்ஸ்டோவும் பொறுப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தெளிவாக பேட்டிங் ஆட, முதல் செசன் முழுவதுமே அந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை.

89 ரன்களுடன் ஜோ ரூட் சதத்தை நோக்கிச்செல்ல, பேர்ஸ்டோ அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. ஒரு செசன் முழுவதும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத இந்திய அணி பெரும் சிக்கலில் உள்ளது.
 

click me!