IND vs SA: விறுவிறுப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட்.. 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆட்டத்தை திருப்பிய பும்ரா

By karthikeyan VFirst Published Jan 13, 2022, 10:26 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, 3ம் நாள் முடிவில் முடிவின் கடைசி ஓவரில் டீன் எல்கரின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் பொறுப்பான சதத்தால் (100*) 198 ரன்கள் அடித்த இந்திய அணி, 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 

212 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கரும் மார்க்ரமும் நிதானமாக தொடங்கினர். ஆனாலும் மார்க்ரமை களத்தில் நிலைக்கவிடாமல் 16 ரன்னில் வீழ்த்தினார் ஷமி. அதன்பின்னர் எல்கருடன் ஜோடி சேர்ந்த கீகன் பீட்டர்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். பீட்டர்சன் அடித்து ஆட, எல்கர் நிதானமாக ஆடினார்.

2வது விக்கெட்டுக்கு எல்கரும் பீட்டர்சனும் இணைந்து 78 ரன்களை சேர்த்தனர். இலக்கு பெரிது இல்லை என்பதால், இந்த பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு அச்சுறுத்தாக இருந்த நிலையில், ஒரு விக்கெட் தேவை என்ற கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் எல்கரின் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

எல்கரின் விக்கெட்டை வீழ்த்தியதால் இந்திய அணி வெற்றி நம்பிக்கையில் உள்ளது. இனிமேல் பீட்டர்சன் ஒருவர் தான் நன்றாக ஆடக்கூடியவர். மற்றவர்கள் பெரிதாக ஃபார்மில் இல்லை.
 

click me!