ஒரே மாதிரி அவுட்டான இந்திய வீரர்கள்.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான சம்பவத்தை செய்த இந்திய அணி

By karthikeyan VFirst Published Jan 13, 2022, 8:27 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சம்பவத்தை செய்துள்ளது இந்திய அணி.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் பொறுப்பான சதத்தால் (100*) 198 ரன்கள் அடித்த இந்திய அணி, 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க அணி அந்த இலக்கை விரட்டிவருகிறது.

இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் இந்திய வீரர்கள் அனைவரும் கேட்ச் கொடுத்தே ஆட்டமிழந்தனர். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 20 விக்கெட். இதில் ஒரு விக்கெட் கூட எல்பிடபிள்யூ அல்லது போல்டு மூலமாக ஆட்டமிழக்கவில்லை. 2 இன்னிங்ஸ்களிலும் இந்திய வீரர்கள் அனைவரும் கேட்ச் கொடுத்தே ஆட்டமிழந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் 20 விக்கெட்டுகளும் கேட்ச் மூலமாக ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை செய்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பாக ஒரு அணியின் 19 விக்கெட்டுகள் கேட்ச் மூலமாக ஆட்டமிழந்திருக்கின்றனர். 5 முறை அதுமாதிரி நடந்திருக்கிறது. ஆனால் 20 விக்கெட்டுகளும் கேட்ச் மூலமாக விழுந்தது இதுவே முதல் முறை.
 

click me!