India vs South Africa: ரிஷப் பண்ட் 100* - தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா

Published : Jan 13, 2022, 07:13 PM IST
India vs South Africa: ரிஷப் பண்ட் 100* - தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக அந்த அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபாரமான பேட்டிங்கால் (79) முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி கீகன் பீட்டர்சனின் (72) பொறுப்பான பேட்டிங்கால் 210 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா, அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் (7) மற்றும் கேஎல் ராகுல் (10) ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. புஜாராவும் கோலியும் களத்தில் இருந்தனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை புஜாராவும் கோலியும் தொடர்ந்தனர். முதல் ஓவரை ஜான்சென் வீசினார். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே புஜாரா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே ரபாடாவின் பந்தில் ரஹானே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

58 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, கோலி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கோலியும் ரிஷப்பும் சேர்ந்து 94 ரன்களை குவித்தனர். அஷ்வின் 7 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 5 ரன்னிலும், உமேஷ் யாதவ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் ரிஷப் பண்ட் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தது. ஆனாலும் நிலைத்து ஆடி போராடி சதமடித்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் தனி நபராக போராடி அபாரமாக சதமடித்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா ஆட்டமிழக்க, இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி அடித்த 198 ரன்களில் 100 ரன்கள் ரிஷப் பண்ட் அடித்தது. ரிஷப் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

இந்திய அணி 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. கடைசி இன்னிங்ஸில் இது சவாலான இலக்கே. அதுவும் பேட்டிங்கிற்கு சவாலான கண்டிஷனில் இது மிகச்சவாலான இலக்கு.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!