தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அடுத்தடுத்த அதிரடிகள்.. அணியை வேற லெவலுக்கு எடுத்துச்செல்ல சிறப்பான நடவடிக்கைகள்

By karthikeyan VFirst Published Dec 18, 2019, 3:56 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அடுத்தடுத்த அதிரடியான நியமனங்களை செய்துவருகிறது. 
 

தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் நட்சத்திர வீரர்களான டிவில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அடுத்தடுத்து அணியிலிருந்து வெளியேறியதால், அந்த அணியில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியது. அதன் விளைவாக உலக கோப்பையில் படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை தழுவியதால், அரையிறுதிக்கு முன்னேற முடியாமல், லீக் சுற்றிலேயே வெளியேறியது. 

எனவே தென்னாப்பிரிக்க அணியில் இருக்கும் வெற்றிடத்தை சரியான வீரர்களை கொண்டு நிரப்பி, அணியை சரியான பாதையில் வழிநடத்தி சிறப்பான அணியாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதற்கான நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறது. 

Latest Videos

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான்களை பயிற்சியாளர்களாக நியமித்துள்ளது. இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான மார்க் பௌச்சர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டரும், தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ஜாக் காலிஸ், தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாக் காலிஸ், மார்க் பௌச்சரின் நியமனம் கண்டிப்பாக தென்னாப்பிரிக்க அணியில் வளர்ச்சியை ஏற்படுத்தும். 

ஜாக் காலிஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 1995ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். 166 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் 328 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முறையே 13,289 மற்றும் 11,579 ரன்களை குவித்துள்ளார். 62 சர்வதேச சதங்களை விளாசி, ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டரிகளில் ஒருவரான ஜாக் காலிஸை பேட்டிங் ஆலோசகராக நியமித்தது, நல்ல மூவ். 
 

click me!