2007 மற்றும் 2013ல் தோனியின் கேப்டன்சி..! என்ன வித்தியாசம்..? கண்கூடா பார்த்த ஆல்ரவுண்டர் வெளியிட்ட சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Jun 28, 2020, 6:00 PM IST
Highlights

தோனி கேப்டன்சியில் முதிர்ச்சி அடைந்தது குறித்து இர்ஃபான் பதான் பேசியுள்ளார். 
 

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். 2007ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி, அதற்கடுத்த ஆண்டே டெஸ்ட் அணியின் கேப்டனும் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி ஒரு வீரராகவும் கேப்டனாகவும் பெரியளவில் ஜொலிக்கவில்லை. எனவே 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தார். 

ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன். 

அவரது களவியூகம் வகுப்பதில் மட்டுமல்லாது, தனது உள்ளுணர்விற்கு மதிப்பு கொடுத்து அதை செயல்படுத்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவது, வீரர்களை கையாள்வது, ஆலோசனை வழங்குவது என சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். 

இந்நிலையில், 2007ல் இருந்த தோனிக்கும் 2013ல் இருந்த கேப்டன் தோனிக்கும் என்ன வித்தியாசம் என்றும் அவரது கேப்டன்சி முதிர்ச்சி குறித்தும் இர்ஃபான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

தோனி குறித்து பேசிய இர்ஃபான் பதான், 2007ல் இருந்து கேப்டன் தோனிக்கும் 2013 கேப்டன் தோனிக்கும் நிறைய வித்தியாசம். அனுபவங்களின் வாயிலாக, இக்கட்டான சூழல்களில் வேகம் குறைவான பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டார் தோனி. 2013 சாம்பியன்ஸ் டிராபியில், இக்கட்டான கட்டத்தில் போட்டியை வென்று கொடுக்க ஸ்பின்னர்களால் தான் முடியும் என நம்பி, அதை செய்து வெற்றியும் பெற்று காட்டினார்.

2007 டி20 உலக கோப்பையில் எல்லாம், விக்கெட் கீப்பிங்கிலிருந்து ஓடிவந்து பவுலருடன் அந்த முனை வரை பேசிவிட்டுத்தான் போவார் தோனி. கேப்டன்சி செய்ய ஆரம்பித்த காலத்தில் பரபரப்பாகவே இருப்பார் தோனி. ஆனால் 2013 சாம்பியன்ஸ் டிராபியின் போது, பவுலர்கள் மீது நம்பிக்கை வைத்து அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

click me!