ரோஹித் சர்மாவை உசுப்பேற்றிவிட்ட அந்த ஒரு புறக்கணிப்பு.! வெகுண்டெழுந்த ஹிட்மேன்.. இர்ஃபான் பதான் சுவாரஸ்ய தகவல்

By karthikeyan VFirst Published Jun 28, 2020, 3:50 PM IST
Highlights

ரோஹித் சர்மாவிற்கு, 2011 உலக கோப்பை அணியில் அவர் புறக்கணிக்கப்பட்டதுதான், அவருக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்தது என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

ரோஹித் சர்மா சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக ரோஹித் சர்மா திகழ்கிறார். டெஸ்ட் அணியிலும் தற்போது தொடக்க வீரராக இடத்தை பிடித்துவிட்டார். 

இன்று மிகப்பெரிய சாதனையாளராகவும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழும் ரோஹித் சர்மாவிற்கு ஆரம்பகாலம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 2007ல் இந்திய அணியில் அறிமுகமான ரோஹித் சர்மா, 2007ல் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று ஆடினார். 

மிடில் ஆர்டரில் இறக்கப்பட்ட ரோஹித் சர்மா, தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அதனால் அவர் அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். 2012ல் தோனி, ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டதற்கு பிறகு தான், ரோஹித்தின் கெரியரே தலைகீழாக மாறியது. அதன்பின்னர் நடந்தவையெல்லாம் வரலாறு. 

ஆனால் இதற்கிடையே 2011ல் இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அணியில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த புறக்கணிப்பிற்கு பின்னர் தான் ரோஹித் சர்மா வெகுண்டெழுந்ததாக இர்ஃபான் பதான் கருதுகிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட்  நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா குறித்து பேசிய இர்ஃபான் பதான், ரோஹித் சர்மா மிகவும் ரிலாக்ஸாக ஆடுவதைக்கண்ட பலர் ஆரம்பக்கட்டத்தில், அவர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றெல்லாம் கருத்து கூறினர். வாசிம் ஜாஃபர் விஷயத்திலும் அதுதான் நடந்தது. வாசிம் ஜாஃபர் மிகவும் நிதானமாக ஓடுவார். பரபரப்பாக இருக்கமாட்டார். ரிலாக்ஸாக இருப்பதால் அவர் மீது வந்த விமர்சனம் தான் ரோஹித் மீதும் வந்தது. 

ரோஹித் சர்மா கடுமையான உழைப்பாளி. அவரை பார்க்கும்போதெல்லாம் மிகவும் நுணுக்கமான விஷயங்களை பற்றித்தான் பேசுவார். அதேபோல அணிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். அணியின் நலன் மற்றும் வெற்றியை பற்றி மட்டுமே யோசிப்பார். அதனால் தான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்தார். 2011 உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட பின்னர் தான், ரோஹித் சர்மாவை தட்டியெழுப்பியது. அதன்பின்னர் வெகுண்டெழுந்தார் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

click me!