ஏதோ வலைப்பயிற்சியில் பேட்டிங் ஆடுற மாதிரி அடி நொறுக்கிட்டாப்ள ஷர்துல் தாகூர்..! இன்சமாம் உல் ஹக் புகழாரம்

By karthikeyan VFirst Published Sep 3, 2021, 4:29 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாகூர் ஆடிய பேட்டிங்கை இன்சமாம் உல் ஹக் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித்(11), ராகுல்(17), புஜாரா(4), ஜடேஜா(10), ரஹானே(14) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பெரிய பெரிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களே திணறிய ஓவல் ஆடுகளத்தில், ஷர்துல் தாகூர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வெறும் 31 பந்தில் அரைசதம் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஷர்துல் தாகூர் 36 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்தார். ஷர்துல் தாகூரின் பேட்டிங்கை பல முன்னாள் ஜாம்பவான்களும் புகழ்ந்துவரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் வெகுவாக புகழாரம் சூட்டியுள்ளார்.

ஷர்துல் தாகூரின் பேட்டிங் குறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், இந்திய அணி 191 என்ற குறைந்த ஸ்கோருக்கு சுருண்டு விட்டதாக நினைக்கலாம். ஆனால் சீமிங் மற்றும் ஸ்விங்கிங் கண்டிஷனில் இந்த ஸ்கோர் அவ்வளவு மோசமான ஸ்கோர் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு பிறகு, இப்படியான ஆடுகளத்தை பார்க்கிறேன். பிட்ச்சில் ஈரப்பதமும், கண்டிஷன் குளிர்ச்சியாகவும் இருந்ததால் தொடர்ச்சியாக பந்து ஸ்விங் ஆனது. எனவே பேட்டிங் ஆடுவதற்கு மிகக்கடினமான கண்டிஷன் அது.

ஆனால் அந்த சவாலான கண்டிஷனிலும் ஷர்துல் தாகூர் பேட்டிங் ஆடிய விதம் அபாரமானது. மிகுந்த நம்பிக்கையுடன் ஆடினார் ஷர்துல் தாகூர். தாகூருக்கு முன் ஆடிய சிறந்த பேட்ஸ்மேன்களே ஸ்கோர் செய்ய திணறிய அந்த பிட்ச்சில், தாகூர் களத்திற்கு வந்தது முதலே பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடினார். அவரது நம்பிக்கை உச்சபட்சத்தில் இருந்தது. அவர் பேட்டிங் ஆடியதை பார்க்கையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியதை போலவே இல்லை. ஏதோ நெட்டில் ஆடியதை போன்றிருந்தது என்று இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!