
இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒருமுனையில் நிலைத்து ஆட, மினோத் பானுகா(27), பானுகா ராஜபக்சா(0) ஆகிய இருவரும் மறுமுனையில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செயா டி சில்வா, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன்களை சேர்க்க உதவியாக இருந்தார். தனஞ்செயா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சாரித் அசலங்காவும் சிறப்பாக ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்டு ஆடிய ஃபெர்னாண்டோ சதமடித்தார். சதமடித்த ஃபெர்னாண்டோ 118 ரன்னில் 43வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த அசலங்கா 72 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவரில் 300 ரன்களை குவித்த இலங்கை அணி, 301 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
301 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலான் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் அடித்து ஆடி சதத்தை நெருங்கினார். ஆனால் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் கேப்டன் டெம்பா பவுமா 38 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
வாண்டர்டசன் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 59 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நன்றாக ஆடிய கிளாசனும் 38 ரன்னில் ஆட்டமிழந்ததையடுத்து, 50 ஓவரில் 286 ரன்கள் மட்டுமே அடித்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்க அணி.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இலங்கை அணி ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக, சதமடித்த இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ தேர்வு செய்யப்பட்டார்.