ஹூடா, சாம்சன், சூர்யகுமார் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்தில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியில் இந்தியா வெற்றி

By karthikeyan VFirst Published Jul 2, 2022, 6:04 PM IST
Highlights

தீபக் ஹூடாவின் அதிரடி அரைசதம் மற்றும் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் டெர்பிஷைர் அணிக்கு எதிரான பயிற்சி டி20 போட்டியில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. கடந்த சுற்றுப்பயணத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று (ஜூலை1) தொடங்கி நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் முடிந்ததும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

அந்த டி20 தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் விதமாக இந்தியன்ஸ் என்ற பெயரில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் டெர்பிஷைர் அணிக்கு எதிராக 2 பயிற்சி போட்டிகள் நடக்கின்றன.

இதையும் படிங்க - அப்போ யுவராஜ்.. இப்போ பும்ரா..! இந்திய வீரர்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்

முதல் பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெர்பிஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. இளம் ஃபாஸ்ட் பவுலர்களான உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ருதுராஜ் மீண்டும் ஒருமுறை வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார். ஆனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடி 38 ரன்கள் அடித்தார். 

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பும்ரா சாதனை..! லாராவின் சாதனையை தகர்த்து வரலாறு

தீபக் ஹூடா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களை விளாசினார். சூர்யகுமார் யாதவ் 22 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்களை விளாச, 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!