#AUSvsIND ஒரு மணி நேர மோசமான ஆட்டத்தால் மொத்தமும் போச்சு.. கேப்டன் கோலி வேதனை

By karthikeyan VFirst Published Dec 19, 2020, 2:55 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஒருமணி நேர மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவ நேரிட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்தது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த போட்டி மூன்றே நாட்களில் முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு சுருண்டது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியை அதைவிட குறைவாக 191 ரன்களுக்கே சுருட்டியது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்(73) மற்றும் லபுஷேன்(47) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. பும்ரா, அஷ்வின், உமேஷ் யாதவின் பவுலிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்டார் பும்ரா. அவர்கள் இருவரும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்து சீரான இடைவெளியில், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, அஷ்வின் என அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த இந்திய  கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய அணி வெறும் 36  ரன்களுக்கே சுருண்டது. 

இந்திய அணியில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கத்தை கூட எட்டாமல் பரிதாபமாக ஒற்றை இலக்கத்திலோ அல்லது டக் அவுட்டோ ஆகி வெளியேறினர். கோலி, ரஹானே, மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய முக்கிய வீரர்கள் அனைவருமே சொதப்ப வெறும் 36 ரன்களுக்கே இந்திய அணி சுருண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெறும் 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது இந்திய அணி. வெறும் 90 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, ஜோ பர்ன்ஸின் அரைசதத்தால், எளிதாக இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் தோற்றது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த தோல்வியின் வலியை வார்த்தைகளில் சொல்வது மிகக்கடினம். முதல் இன்னிங்ஸில் அறுபது ரன்கள் முன்னிலை பெற்றும், 2வது இன்னிங்ஸில் சரிந்துவிட்டோம். 2 நாட்கள் சிறப்பாக ஆடி நல்ல நிலையில் இருந்த நிலையில், ஒரு மணி நேர மோசமான ஆட்டத்தால் தோற்றுவிட்டோம். உண்மையாகவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பேட்டிங் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள் நன்றாக பந்துவீசினர். ஆனாலும் எங்களது பேட்டிங் படுமோசமாக இருந்தது என்று கோலி தெரிவித்தார்.
 

click me!