#AUSvsIND முதல் டெஸ்ட்டில் ஆஸி., அபார வெற்றி..! படுமோசமா தோற்ற இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 19, 2020, 1:41 PM IST
Highlights

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்தது. 

நேற்று முன் தினம்(17ம் தேதி) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் டிம் பெய்ன்(73) மற்றும் லபுஷேன்(47) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. பும்ரா, அஷ்வின், உமேஷ் யாதவின் பவுலிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்டார் பும்ரா. அவர்கள் இருவரும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்து சீரான இடைவெளியில், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, அஷ்வின் என அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த இந்திய  கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய அணி வெறும் 36  ரன்களுக்கே சுருண்டது. 

இந்திய அணியில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கத்தை கூட எட்டாமல் பரிதாபமாக ஒற்றை இலக்கத்திலோ அல்லது டக் அவுட்டோ ஆகி வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெறும் 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது இந்திய அணி. வெறும் 90 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் மற்றும் லபுஷேன் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். 53 பந்தில் 33 ரன்கள் அடித்திருந்த மேத்யூ வேட் ரன் அவுட்டாக, லபுஷேன் ஆறு ரன்களுக்கு அஷ்வினின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டரை நாட்களிலேயே டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது. 
 

click me!