இங்கிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் ரோகித் சர்மா கண்ணீர் விட்ட காட்சி ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மழையை கருத்தில் கொண்டு பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களும் எடுத்தனர்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட் எடுத்தார். ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், அடில் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், முதல் 3 ஓவர்கள் வரையில் விக்கெட்டுகளை இழக்காத இங்கிலாந்து, அதன் பிறகு அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அக்ஷர் மற்றும் குல்தீப் இருவரும் தங்களது ஓவர்களில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துக் கொடுத்தனர்.
ஜஸ்ப்ரித் பும்ரா தன் பங்கிற்கு வேகத்தில் மிரட்டவே இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இதில் அதிகபட்சமாக ஹாரி ஃப்ரூக் 25 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 16.4 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு டிரெஸிங் ரூமிற்கு சென்ற ரோகித் சர்மா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது அவரை விராட் கோலி தான் சமாதானப்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் முறையாக தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது. அதில் இலங்கையிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் தான் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கயானாவில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
Emotional Rohit Sharma after qualifying into the final. ❤️ pic.twitter.com/XBv30UVixW
— Johns. (@CricCrazyJohns)