Latest Videos

IND vs ENG T20 WC 2024: மழைக்கு பிறகு டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்: பழி தீர்க்குமா இந்தியா?

By Rsiva kumarFirst Published Jun 27, 2024, 9:06 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி கயானாவில் நடைபெற இருந்தது. ஆனால் இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட இருந்தது. கயானாவில் பெய்த மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது மழை நின்று வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 15 நிமிடங்களுக்கு பிறகு டாஸ் போடப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

இங்கிலாந்து:

ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), பிலிப் சால்ட், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ர ஆர்ச்சர், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளே.

இந்த போட்டியில் ரிசர்வ் டே இல்லாத நிலையில் கூடுதலாக, 250 நிமிடங்கள் கிட்டத்தட்ட 4 மணி நேரமும் 10 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் எந்த அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தில் இருக்கிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 2ஆவது இடத்தில் இங்கிலாந்து இருக்கிறது.

அந்த வகையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியா தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 முறை டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளன. இதில், 2 முறை இந்தியாவும், 2 முறை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து 2ஆவது முறையாக சாம்பியனானது.

ஏற்கனவே நடந்து முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!