அவருக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன்.. எதிரணி வீரருக்காக வருந்திய விராட் கோலி

By karthikeyan VFirst Published Jun 5, 2019, 10:07 AM IST
Highlights

இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று படுமோசமாக உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது. 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

தென்னாப்பிரிக்க அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று படுமோசமாக உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியை வீழ்த்துவது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வலுவிழந்துள்ளது. காயம் காரணமாக அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பவுலிங் தான் தென்னாப்பிரிக்க அணியின் பெரிய பலமாக இருந்த நிலையில், ஸ்டெய்னும் இங்கிடியும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. 

தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் மற்றும் அனுபவ ஃபாஸ்ட் பவுலரான ஸ்டெய்ன், கடந்த 3 ஆண்டுகளாகவே அதிகமான காயங்கள் அடைந்துவருகிறார். அதனால் அடிக்கடி அணிக்காக ஆடமுடியாத சூழல் உருவானது. காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஒருசில போட்டிகளில் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்த ஸ்டெய்ன், உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்று மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து சென்றார். 

ஆனால் மீண்டும் தோள்பட்டையில் காயம் அடைந்த ஸ்டெய்ன், இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் ஆடவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது காயம் சரியாகாததால், உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இது தனிப்பட்ட முறையில் ஸ்டெய்னுக்கு அதிகமான வருத்தத்தையும் பெருந்துயரத்தையும் கொடுத்திருக்கும். அவருக்கு வருத்தம் தான். ஆனால் தென்னாப்பிரிக்க அணிக்கோ, அவரது இழப்பு பெரும் பாதிப்பு. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஸ்டெய்னுக்காக வருத்தம் தெரிவித்தார். ஸ்டெய்ன் குறித்து பேசிய கோலி, டேல் ஸ்டெய்ன் மீண்டும் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடப்போவதால் மிகுந்த மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விலகியிருப்பது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் அளித்திருக்கும். அவருக்காக நான் வருந்துகிறேன். சக வீரர்களை உற்சாகப்படுத்துவதிலும் உத்வேகப்படுத்துவதிலும் சிறந்தவர் ஸ்டெய்ன். அவர் இன்னும் விக்கெட்டுகளை வீழ்த்தும் வேட்கையில் இருந்தார். ஆனால் காயம் காரணமாக இப்படி ஆயிற்று. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றார் விராட் கோலி.

விராட் கோலியுடன் டேல் ஸ்டெய்ன் ஆர்சிபி அணியில் ஆடுவதால் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் ஸ்டெய்னுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் விராட் கோலி.
 

click me!