இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில், ஜாக் கிராவ்லி மட்டுமே அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில், 3ஆம் நாள் முடிவில் இந்திய அணியில் ரோகித் சர்மா 24 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 24 ரன்கள் எடுத்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், 4000 ரன்களை கடந்த 17ஆவது வீரராகவும், அதிவேகமாக இந்த ரன்களை கடந்த 10ஆவது வீரராகவும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா, இதுவரையில் 58 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில், 11 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் எடுத்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று தொடங்கிய 4ஆம் நாள் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 4044 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.