இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஏற்கனவே விராட் கோலி 2ஆவது போட்டியில் இடம் பெறாத நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 2ஆவது போட்டியிலிருந்து விலகினார். இவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ரஜத் படிதார் சர்ஃபராஸ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தான் இன்றைய பிளேயிங் 11ல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக ரஜத் படிதார் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார் மேலும், குல்தீப் யாதவ்வும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே போன்று இங்கிலாந்து அணியில் ஜாக் லீச் மற்றும் மார்க் வுட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சோயிப் பசீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகேஷ் குமார்
இங்கிலாந்து:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பசீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்