நேபாள் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 10ஆவது போட்டியில் இந்திய மகளிர் அணியானது 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 தொடரானது கடந்த 19 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், 8 அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 குரூப்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி இந்தியா மகளிர் அணியானது விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது இதையடுத்து, 3ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில், நேபாள் அணியை எதிர்கொண்டது.
undefined
முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 81 ரன்களும், தயாளன் ஹேமலதா 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் 179 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நேபாள் மகளிர் அணி விளையாடியது. எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நேபாள் மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய மகளிர் அணியைப் பொறுத்த வரையில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் எடுத்தார். ராதா யாதவ் மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரேணுகா தாகூர் சிங் ஒரு விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா மகளிர் அணியானது விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதே போன்று பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியோடு 2ஆவது அணியாக அரையிறுதிக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.