
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இது விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அபாரமாக விளையாடி சதமடித்த ரவீந்திர ஜடேஜா 175 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். வழக்கம்போலவே அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 97 பந்தில் 96 ரன்கள் அடித்தார். அஷ்வின் 61 ரன்களும், கோலி 45 ரன்களும் அடித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் தவித்துவரும் விராட் கோலி, அவரது 100வது டெஸ்ட்டிலாவது பெரிய ஸ்கோரை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 45 ரன்களில் இலங்கை இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவின் பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார்.
விராட் கோலி இந்த போட்டியில் எப்படி, எப்போது, யாருடைய பந்தில் அவுட்டாவார் என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் முன்கூட்டியே கணித்திருந்தார். அந்த குறிப்பிட்ட நபரின் டுவிட்டர் பதிவில், விராட் கோலி அவரது 100வது டெஸ்ட்டில் 45 ரன்களுக்கு எம்பல்டேனியாவின் பந்தில் போல்டாவார் என பதிவிட்டிருந்தார்.
அதேபோலவே விராட் கோலி 45 ரன்னில் எம்பல்டேனியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலியின் விக்கெட் குறித்த அந்த நெட்டிசனின் துல்லியமான கணிப்பு, பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், சிலருக்கு ஃபிக்ஸிங் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.