Ravindra Jadeja: டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் 36 ஆண்டுகால சாதனையை தகர்த்த ஜடேஜா

Published : Mar 05, 2022, 03:31 PM IST
Ravindra Jadeja: டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் 36 ஆண்டுகால சாதனையை தகர்த்த ஜடேஜா

சுருக்கம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் 36 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (29) மற்றும் மயன்க் அகர்வால் (33) ஆகிய இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் ஹனுமா விஹாரி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹனுமா விஹாரி 58 ரன்களும், கோலி 45 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும் அடித்தனர். 

228 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 5 விக்கெட் விழுந்தபின்னர், இந்திய அணிக்கு மூன்று 100+ பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா. ரிஷப் பண்ட் - ஜடேஜா இணைந்து 6வது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஜடேஜா - அஷ்வின் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்தனர். அஷ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் ஜடேஜா - ஷமி இணைந்து 9வது விக்கெட்டுக்கு 103 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி களத்தில் இருந்த நிலையில், 574 ரன்களுக்கு இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.

ஜடேஜா 175 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இந்த போட்டியில் 7ம் வரிசையில் இறங்கி 175 ரன்களை குவித்த ஜடேஜா, கபில் தேவின் 36 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

1986ம் ஆண்டு கான்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 7ம் வரிசையில் இறங்கி கபில் தேவ் 163 ரன்களை குவித்தார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 7-11ம் வரிசையில் இறங்கி இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடந்துவரும் டெஸ்ட்டில் 7ம் வரிசையில் இறங்கி 175 ரன்களை குவித்த ஜடேஜா,  கபில் தேவின் அந்த ரெக்கார்டை தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7ம் வரிசையில் இறங்கி 159 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 3ம் இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ம் வரிசையில் இறங்கி, மூன்று 100+ பார்ட்னர்ஷிப்பில் பங்கெடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..
IND vs SA 3வது ODI: ரோஹித் சர்மா புதிய உலக சாதனை; சச்சின்-லாரா கிளப்பில் இணைந்த ஹிட்மேன்..!