ஐசிசி 2023-2027 வரையிலான 4 ஆண்டுகளுக்கான சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டி தொடர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது ஐசிசி.
2023 - 2027 வரையிலான 4 ஆண்டில் சர்வதேச அளவில் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 323 டி20 போட்டிகள் என மொத்தமாக 777 போட்டிகள் நடக்கவுள்ளன. அதில் 2023 மே மாதம் முதல் 2027 ஏப்ரல் வரை இந்திய அணி 38 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் தொடர் 2019-2021ல் நடந்தது. ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. அந்த குறிப்பிட்ட 2 ஆண்டுகளில் ஆடும் டெஸ்ட் தொடர்களின் முடிவில் ஃபைனலுக்கு முன்பாக, எந்த 2 அணிகள் அதிக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனவோ அந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்.
இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து
முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. 2021-2023ல் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது.
3வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025லும், 4வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027லும் நடக்கவுள்ளன. ஐசிசி இப்போது வெளியிட்டுள்ள போட்டி தொடர்களில், டெஸ்ட் தொடர்கள் இந்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானவை ஆகும்.
2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சில கடினமான சுற்றுப்பயணங்களில் ஆடவுள்ளது. 3வது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (2023-2025) இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடவுள்ளது. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் கண்டிப்பாக கடினமானதாக அமையும். இதே டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இந்தியாவிற்கு வந்து ஆடவுள்ளன.
இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்
2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. அதேவேளையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்தியாவிற்கு வருகின்றன.
இந்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் 5 டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியதாக அமைகிறது. 1992ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் தான் ஆடவுள்ளது.