477 ரன்கள் குவித்த இந்தியா – 259 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து!

By Rsiva kumarFirst Published Mar 9, 2024, 10:23 AM IST
Highlights

இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் குவித்து 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவசரப்பட்டு அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சுப்மன் கில் களமிறங்கினார். இவரும், வந்த உடனே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் எடுக்க, ரோகித் சர்மா, 83 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 52 ரன்களுடன் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இதில் ரோகித் சர்மா கூடுதலாக 51 ரன்கள் சேர்க்க டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதே போன்று சும்பன் கில் சதம் விளாசி 110 ரன்கள் எடுத்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் அறிமுகமான தேவ்தத் படிக்கல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சர்ஃபராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், துருவ் ஜூரெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்தது.

இதில், குல்தீப் யாதவ் 27 ரன்னுடனும், ஜஸ்ப்ரித் பும்ரா 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், குல்தீப் யாதவ் 3 ரன்கள் கூடுதலாக எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று பும்ரா கூடுதலாக ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் குவித்து 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

click me!