பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய பதான் பிரதர்ஸ்.. நமன் ஓஜா காட்டடி..! கடுமையாக போராடி தோற்ற இந்தியா மஹாராஜாஸ்

By karthikeyan VFirst Published Jan 28, 2022, 2:33 PM IST
Highlights

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணியிடம் போராடி தோற்ற இந்தியா மஹாராஜாஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் ஃபைனலுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடந்துவருகிறது. நேற்று நடந்த ஃபைனலுக்கு முந்தைய கடைசி போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்தியா மஹாராஜாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கெவின் பீட்டர்சன் 5 பந்தில் 11 ரன் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மஸ்டர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆடினார் ஹெர்ஷல் கிப்ஸ்.

இன்றைய கிப்ஸின் பேட்டிங், விண்டேஜ் கிப்ஸின் பேட்டிங்கை கண்முன் நிறுத்தியது. அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹெர்ஷல் கிப்ஸ், 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்த நிலையில், 11 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கெவின் ஓ பிரயன் 14 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்த வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி.

இதையடுத்து 229 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய இந்தியா மஹாராஜாஸ் அணியின் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் 4 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய பத்ரிநாத் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான நமன் ஓஜா காட்டடி அடித்தார். இந்த தொடரில் ஏற்கனவே சதமடித்த நமன் ஓஜா, இந்த போட்டியிலும் சதத்தை நெருங்கினார். ஆனால் 7 ரன்னில் சதத்தை தவறவிட்டு 95 ரன்னில் ஆட்டமிழந்தார். 51 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்தார் நமன் ஓஜா.

நமன் ஓஜாவுடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யூசுஃப் பதான் அதிரடியாக ஆடி 22 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசினார். யூசுஃப் பதான் ஆட்டமிழந்த பின் களத்திற்கு வந்த ஸ்டூவர்ட் பின்னி 3 ரன்னில் நடையை கட்டினார். அவரைத்தொடர்ந்து நமன் ஓஜா 95 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து காட்டடி அடித்த இர்ஃபான் பதான் 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்தார். ஆனால் இர்ஃபான் பதான் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்ததையடுத்து, இந்தியா மஹாராஜாஸ் அணி 20 ஓவரில் 223 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

229 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டிய இந்தியா மஹாராஜாஸ் அணி கடைசியில் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் நூலிழையில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்த தொடரை விட்டு இந்தியா மஹாராஜாஸ் அணி வெளியேறியது. ஆசியா லயன்ஸ் அணியும் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணியும் ஃபைனலில் மோதுகின்றன.
 

click me!