நான் தேர்வாளரா இருந்திருந்தால் 2 வருஷத்துக்கு முன்பே அவரை டீம்ல இருந்து தூக்கியிருப்பேன்!முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 27, 2022, 8:42 PM IST
Highlights

தான் மட்டும் இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால் அஜிங்க்யா ரஹானேவை 2 ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் அணியிலிருந்து தூக்கியிருப்பேன் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரஹானே. இந்தியாவை விட வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அதிக சராசரியை கொண்டவர் ரஹானே. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிவருகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலேயே அவரை அணியில் சேர்க்காமல் ஷ்ரேயாஸ் ஐயர் - ஹனுமா விஹாரி ஆகியோரை சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியபோதிலும், கடைசி டெஸ்ட்டிலும் சேர்க்கப்பட்டார் ரஹானே. ஆனால் அந்த தொடர் முழுவதுமாகவே, 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 136 ரன்கள் மட்டுமே அடித்தார்.

புஜாராவும் 2 ஆண்டுகளாக சொதப்புகிறார். ஆனால் அவர் பேட்டிங் ஆடும் விதம், ரஹானே அளவிற்கு மோசமாக இல்லை. ஆனால் ரஹானேவின் பேட்டிங் ஆடும் விதமோ மோசமாக இருக்கிறது. களத்தில் அவர் நம்பிக்கையுடன் பேட்டிங் ஆடுவதாகவே தெரியவில்லை.

ரஹானே தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், ரஹானே குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர்,  ரஹானே தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக ஆடிய 3வது டெஸ்ட் போட்டிதான், அவரது கடைசி டெஸ்ட் என்று நான் சொன்னால், யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று அனைவருக்குமே தெரியும். 2017ம் ஆண்டிலிருந்தே ரஹானே சரியாக ஆடவில்லை. அவரது பேட்டிங்கில் தெளிவே இல்லை.

அவர் பேட்டிங் ஆடும் விதம், அவுட்டாகும் விதத்திலிருந்தே அது புலப்படும். கோலியும் 2 ஆண்டுகளாக சதமடிக்கவில்லை என்றாலும், 70-80 என தொடர்ந்து ஸ்கோர் செய்துகொண்டிருக்கிறார். ரஹானே அப்படியில்லை. புஜாரா 100 டெஸ்ட் போட்டிகளை நெருங்கி கொண்டிருக்கிறார். அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் ரஹானேவிற்கு வாய்ப்பே இல்லை. நான் தேர்வாளராக இருந்திருந்தால்,  2 ஆண்டுகளுக்கு முன்பே அவரை அணியிலிருந்து தூக்கியிருப்பேன் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!