India vs England 4th Test:டக் அவுட்டில் வெளியேறிய ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான் – வெற்றிக்காக போராடும் இந்தியா!

By Rsiva kumar  |  First Published Feb 26, 2024, 1:19 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் 90 ரன்கள் குவித்து 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.

Tap to resize

Latest Videos

இதில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 40 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆண்டர்சன் டைவ் அடித்து பிடித்து அசத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கி அடிக்க முயற்சித்து டாம் ஹார்ட்லி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் சோயிப் பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 4 ரன்களில் பஷீர் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அதே ஓவரின் அடுத்த பந்தில் சர்ஃபராஸ் கான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

நடுவர் அவுட் கொடுக்காத போதிலும் விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் துள்ளிக் குதித்த இங்கிலாந்து வீரர்களை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சாந்தப்படுத்து ரெவியூ எடுத்தார். இதில், அவுட் என்று வரவே இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்டை கொண்டாடினார். சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வரும் நிலையில் இந்தியா வெற்றி பெற இன்னும் 36 ரன்கள் தேவை. சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவை. எனினும் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்று கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!