
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஎல் ராகுல், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு முறையே, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி மளமளவென 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, 13 ரன்களில் இன்னிங்ஸின் 4வது ஓவரில் அல்ஸாரி ஜோசஃபின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் கோலி டக் அவுட்டானார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்காமல் திணறிவரும் விராட் கோலி மீது இந்த தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த தொடரிலும் ஏமாற்றமளித்தார் விராட் கோலி. இன்று நடந்துவரும் 3வது ஒருநாள் போட்டியில் கோலியிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன்னே அடிக்காமல் வெறும் 2 பந்தில் டக் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றமளித்தார்.
அதன்பின்னர் தவானும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 42 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.