
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால், 10 அணிகள் இந்த சீசனில் ஆடுகின்றன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில் 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தொடங்கும் தேதி இன்னும் உறுதியாகவில்லை. மார்ச் மாத கடைசியில் போட்டிகள் தொடங்கும் என தெரிகிறது.
கடைசியாக 2019ம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் சீசன் முழுவதுமாக நடத்தப்பட்டது. அதன்பின்னர் 2 ஆண்டுகளாக 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனாவால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியவில்லை. 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு முதல் பாதி சீசன் இந்தியாவில் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பால் 2வது சீசன் அமீரகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், 15வது சீசன் முழுவதுமாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மொத்த போட்டிகளும் நடத்தப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வான்கடே ஸ்டேடியம், ப்ராபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன் ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் மொத்த போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.