
மும்பையில் நடைபெற்ற ஐந்தாவது T20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அபிஷேக் சர்மா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக 135 ரன்கள் குவித்தார். பின்னர் பந்துவீச்சிலும் அசத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, சிவம் துபே ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தனர்.
248 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். ஷமியின் முதல் ஓவரிலேயே பவுண்டரிகள் பறந்தன. ஆனால் மூன்றாவது ஓவரில் பென் டக்கெட்டை டக் அவுட்டாக்கி ஷமி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் எந்த பேட்ஸ்மேனாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 55 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினர். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
54 பந்துகளில் 135 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. T20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 13 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிக்குக் காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.