இந்தூரில் அந்த ஊரின் மைந்தன் ரஜத் பட்டிதரை ஆடவைக்காதது குறித்து கேள்விக்கு காட்டமாக பதிலளித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. அடுத்ததாக 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி நாளை(ஜனவரி27) ராஞ்சியில் நடக்கிறது.
ஒருநாள் உலக கோப்பைக்காக தயாராகிவரும் இந்திய அணியில், பிசிசிஐயால் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட 20 வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் ஆடாததால் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு ஆட வாய்ப்பளிக்கப்பட்டது.
அனில் கும்ப்ளேவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..!
முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் ஜெயித்து இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்டதால், கடைசி போட்டியில் ரஜத் பட்டிதருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் அணிக்கு திரும்பிவிட்டால் எப்படியும் ரஜத் பட்டிதருக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆடவில்லை என்றால், அதற்கடுத்தபடியாக இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவுக்குத்தான் அணியில் இடம் கிடைக்கும்.
நாளை டி20 தொடர் தொடங்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம், இந்தூரில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அந்த ஊரின் மைந்தனான ரஜத் பட்டிதருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பாபர் அசாமுக்கு 2 விருதுகளை வழங்கி கௌரவித்த ஐசிசி..! 2022ன் சிறந்த டெஸ்ட் வீரர் பென் ஸ்டோக்ஸ்
அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, ரஜத் பட்டிதரை இந்தூரில் ஆடவைத்திருக்கலாம். அடுத்து, இஷான் கிஷன் அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நான் ஆடுகிரேன் என்பார். ஒரு அணி அப்படியெல்லாம் செயல்படமுடியாது. அணிக்கென்று ஒரு திட்டம் இருக்கும். அதன்படித்தான் செயல்பட முடியும். அனைத்து வீரர்களுக்கும் அவரவர்க்கான நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும். அதை வீரர்களிடம் தெளிவாக தெரியப்படுத்தியும் இருக்கிறோம். நிறைய வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எனவே அவரவர்க்கான வாய்ப்பு வரும்போது அணியில் இடம் கிடைக்கும் என்றுரோஹித் சர்மா தெரிவித்தார்.