ஷ்ரேயாஸ் அதிரடி அரைசதம்.. சாம்சன், ஜடேஜா காட்டடி.. இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Feb 26, 2022, 10:44 PM IST
Highlights

ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால், இலங்கை நிர்ணயித்த 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை 18வது ஓவரின் முதல் பந்திலேயே அடித்து அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது. தர்மசாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். 29 பந்தில் 38 ரன்கள் அடித்து குணதிலகா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்கா (2), காமில் மிஷாரா (1), தினேஷ் சண்டிமால் (9) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 102 ரன்களுக்கே இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் பதும் நிசாங்கா அரைசதம் அடித்தார். அவரும் கேப்டன் தசுன் ஷனாகாவும் சேர்ந்து காட்டடி அடித்தனர். 53 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் அடித்து நிசாங்கா அவுட்டாக, அடித்து ஆடிய கேப்டன் ஷனாகா, டெத் ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய ஷனாகா, 19 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 48 ரன்களை விளாச, இலங்கை அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 72 ரன்கள் கிடைத்ததன் விளைவாக 20 ஓவரில் 183 ரன்களை குவித்தது இலங்கை அணி.

184 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ஓவரில் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.

அதன்பின்னர் ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடியதால், செட்டில் ஆக சற்று நேரம் எடுத்துக்கொண்டார் சஞ்சு சாம்சன். செட்டில் ஆனபின்னர் லஹிரு குமாரா வீசிய 13வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டு, அதே ஓவரில் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். சாம்சன் 25 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சாம்சன்.

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு, சஞ்சு சாம்சன் அடித்து ஆடிய 13வது ஓவருக்கு பின்னர், பெரிதாக ஸ்டிரைக் கிடைக்கவில்லை. ஏனெனில் 13வது ஓவரில் சாம்சன் வெளுத்து வாங்கிவிட்டு அவுட்டாக, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜடேஜா, வந்ததிலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். பவுண்டரிகளாக விளாசிய ஜடேஜா, ஸ்டிரைக்கை தானே தக்கவைத்துக்கொண்டு அடித்து நொறுக்கினார். 18 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 45 ரன்களை விளாசினார் ஜடேஜா. ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவிக்க, இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 18வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது.
 

click me!