
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். 29 பந்தில் 38 ரன்கள் அடித்து குணதிலகா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்கா (2), காமில் மிஷாரா (1), தினேஷ் சண்டிமால் (9) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 102 ரன்களுக்கே இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் பதும் நிசாங்கா அரைசதம் அடித்தார். அவரும் கேப்டன் தசுன் ஷனாகாவும் சேர்ந்து காட்டடி அடித்தனர். 53 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் அடித்து நிசாங்கா அவுட்டாக, அடித்து ஆடிய கேப்டன் ஷனாகா, டெத் ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தார்.
ஹர்ஷல் படேல் வீசிய 17வது ஓவரில் 2 சிக்ஸர் அடித்த ஷனாகா, புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸரும், ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மறுபடியும் 2 சிக்ஸர்களை விளாசிய ஷனாகா 19 பந்தில் 48 ரன்களை விளாசினார். ஷனாகாவின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 183 ரன்களை குவித்த இலங்கை அணி, 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 72 ரன்கள் அடித்தது.