NZ vs SA: முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்கா! நியூசி.,யை காப்பாற்றிய காலின் டி கிராண்ட்ஹோம்

By karthikeyan VFirst Published Feb 26, 2022, 5:34 PM IST
Highlights

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 364 ரன்கள் அடித்த நிலையில்,  2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்துள்ளது.
 

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.

2வது டெஸ்ட் போட்டி நேற்று(25ம் தேதி) கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது தென்னாப்பிரிக்க அணி. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் எர்வீ மற்றும் எல்கர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 111 ரன்களை குவித்தது. எல்கர்  41 ரன்னில் ஆட்டமிழந்தார்.  3ம் வரிசையில் இறங்கிய மார்க்ரமும் நன்றாக ஆடினார். மார்க்ரம் 42 ரன்னில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி சதமடித்த எர்வீ 108 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் ஆட்டமிழந்ததற்கு, அடுத்த ஓவரிலேயே எர்வீயும் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வாண்டெர் டசனும் டெம்பா பவுமாவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். டசன் 13 ரன்களுடனும், பவுமா 22 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை பவுமாவும் டசனும் தொடர்ந்த நிலையில், பவுமா 29 ரன்களிலும் டசன் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் நன்றாக ஆடிய மார்கோ ஜான்சென் 37 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றார்.  மஹராஜ் அவரது பங்கிற்கு 36 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 364 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் ரன்னே அடிக்காமலும், வில் யங் 3 ரன்னிலும் நடையை கட்டினர். டெவான் கான்வே 16 ரன்னில் ஆட்டமிழக்க, நன்றாக விளையாடிய ஹென்ரி நிகோல்ஸ் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தார். டாம் பிளண்டெல் வெறும் 6 ரன்னில் அவுட்டானார். 

91 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் டேரைல் மிட்செலும் காலின் டி கிராண்ட்ஹோமும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். அதிரடியாக விளையாடிய காலின் டி கிராண்ட்ஹோம் அரைசதம் அடித்தார். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் அடித்துள்ளது. அதிரடியாக விளையாடிய காலின் டி கிராண்ட் ஹோம் 61 பந்தில் 54 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். டேரைல் மிட்செல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  தென்னாப்பிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரபாடா 3 விக்கெட்டுகளும்,  மார்கோ ஜான்சென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
 

click me!