சீனியர்ஸ், ஜூனியர்ஸ்னு பாரபட்சம் இல்லாமல் நியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இந்தியா.. அண்டர் 19 உலக கோப்பையில் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 25, 2020, 9:53 AM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
 

அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது. இலங்கை மற்றும் ஜப்பான் அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யன்ஷ் சக்ஸேனா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். 

நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிய அவர்கள் இருவரும், நிதானமாக ஆடிய அதேவேளையில் ரன்களை சேர்க்கவும் தவறவில்லை. சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடிக்க, சக்ஸேனா அரைசதத்தை நெருங்கினார். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ஓவரில் 103 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை நீண்ட நேரம் பெய்ததால், போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து ஜெய்ஸ்வாலும் சக்ஸேனாவும் களத்திற்கு வந்து எஞ்சிய 2 ஓவர்களில் பேட்டிங் ஆடினர். சக்ஸேனா தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்திய அணி அந்த 2 ஓவரில் 12 ரன்கள் அடித்ததை அடுத்து, 23 ஓவரில் 115 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

கடினமான இந்த இலக்கை விரட்டிய நியூசிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ரவி பிஷ்னோய் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அதர்வா அன்கோல்கர் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததை அடுத்து, அந்த அணி 21 ஓவரில் 147 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார். 

Also Read - டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடந்த சம்பவம்.. இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

நியூசிலாந்து அணியை டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், அண்டர் 19 இந்திய அணியும் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று இரு நாட்டு அணிகளுக்கும் நடந்த மற்றொரு போட்டியில் மட்டும் இந்தியா தோற்றது. இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து ஏ அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

click me!