IND vs NZ இந்தியாவின் சுழலில் சுருண்டது நியூசி.,! 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Dec 6, 2021, 10:43 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின்  முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி தொடங்கி மும்பை வான்கடேவில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர் (1956) மற்றும் அனில் கும்ப்ளேவிற்கு (1999) அடுத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஜாஸ் படேல். இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் அஜாஸ் படேல் தான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்கள் அடித்தார். புஜாரா மற்றும் கில் ஆகிய இருவரும் தலா 47 ரன்கள் அடித்தனர்.  கேப்டன் கோலி 36 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய அக்ஸர் படேல், 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது.

540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் டாம் லேதம் (6), வில் யங்(20) மற்றும் சீனியர் வீரர் ரோஸ் டெய்லர்(6) ஆகிய மூவரையுமே அஷ்வின் வீழ்த்தினார்.  டாம் பிளண்டெல் ரன்னே அடிக்காமல் ரன் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த டேரைல் மிட்செலை 60 ரன்னில் வீழ்த்தினார் அக்ஸர் படேல்.

3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 140 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த ஹென்ரி நிகோல்ஸும் ராச்சின் ரவீந்திராவும் 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். ராச்சின் ரவீந்திராவை 18 ரன்னில் வீழ்த்திய ஜெயந்த் யாதவ், கைல் ஜாமிசன் (0), டிம் சௌதி (0) மற்றும் சோமர்வில் (1) ஆகிய மூவரையும் வீழ்த்த, 44 ரன்கள் அடித்த ஹென்ரி நிகோல்ஸை கடைசி விக்கெட்டாக வீழ்த்தி ஆட்டத்தை முடித்துவைத்தார் அஷ்வின்.

167 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி ஆல் அவுட்டாக, 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
 

click me!