IND vs NZ 2வது டெஸ்ட்: அஷ்வின் அசத்தல் பவுலிங்..! வெற்றியை நெருங்கிய இந்தியா

Published : Dec 05, 2021, 10:16 PM IST
IND vs NZ 2வது டெஸ்ட்: அஷ்வின் அசத்தல் பவுலிங்..! வெற்றியை நெருங்கிய இந்தியா

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நெருங்கிவிட்டது இந்திய அணி.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின்  முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர் (1956) மற்றும் அனில் கும்ப்ளேவிற்கு (1999) அடுத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஜாஸ் படேல். இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் அஜாஸ் படேல் தான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்கள் அடித்தார். புஜாரா மற்றும் கில் ஆகிய இருவரும் தலா 47 ரன்கள் அடித்தனர்.  கேப்டன் கோலி 36 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய அக்ஸர் படேல், 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் டாம் லேதம் (6), வில் யங்(20) மற்றும் சீனியர் வீரர் ரோஸ் டெய்லர்(6) ஆகிய மூவரையுமே அஷ்வின் வீழ்த்தினார்.  டாம் பிளண்டெல் ரன்னே அடிக்காமல் ரன் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த டேரைல் மிட்செலை 60 ரன்னில் வீழ்த்தினார் அக்ஸர் படேல்.

129 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. இதையடுத்து ஹென்ரி நிகோல்ஸுடன் ராச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்துள்ளது நியூசிலாந்து அணி. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 5 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் எளிதாக ஜெயித்துவிடும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆத்தாடி.. இவ்வளவா.. 'தல' தோனிக்கு ரூ.1,000 அபராதம்.. ஏன் தெரியுமா?
India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!