இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டை சம்மதிக்க படாதபட்டு பட்டோம் - சௌரவ் கங்குலி

By karthikeyan VFirst Published Dec 5, 2021, 9:42 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் டிராவிட்டை சம்மதிக்க வைக்க பட்ட கஷ்டத்தை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விவரித்துள்ளார்.
 

2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பணியை தொடங்கிய ராகுல் டிராவிட், 2023 ஒருநாள் உலக கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார். அவர் விரும்பினால், அதன்பின்னரும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும்.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சம்மதிக்கவைக்க பிசிசிஐ எவ்வளவு கஷ்டப்பட்டது என்பதை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விவரித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சௌரவ் கங்குலி, நீண்டகாலத்திற்கு முன்பே ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து நானும் ஜெய் ஷாவும் பேசியிருக்கிறோம். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளரானால், ஆண்டில் 8-9 மாதங்கள் அணியுடனேயே இருக்க வேண்டும் என்பதால் குழந்தைகளுடன் இருக்க முடியாது என்பதால் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மறுத்தார் ராகுல் டிராவிட். 

ஒருகட்டத்தில், நாங்கள் ராகுல் டிராவிட்டை வலியுறுத்துவதை நிறுத்திவிட்டு, அவரை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமித்தோம். அந்த பொறுப்பில் நியமித்த பிறகும், அவரை சில முறை, பயிற்சியாளர் பொறுப்பை ஏற்குமாறு கேட்டோம். இந்திய வீரர்களிடம் எந்தமாதிரியான பயிற்சியாளர் வேண்டும் என கேட்டபோது, அவர்களும் ராகுல் டிராவிட்டைத்தான் கூறினார்கள். அதை டிராவிட்டிடம் சொல்லி, நான் தனிப்பட்ட முறையில் பலமுறை அவரிடம் பேசியிருக்கிறேன். உங்களுக்கு(டிராவிட்டுக்கு) இது மிகவும் கடினம் என்று எனக்கு(கங்குலி) தெரியும். ஆனாலும் 2 ஆண்டுகள் மட்டும் பயிற்சியாளராக இருங்கள். அதன்பின்னர் வேறு வழி செய்துகொள்ளலாம் என்றேன்.

டிராவிட்டின் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக திடீரென அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக ஒப்புக்கொண்டார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!